அன்பு
ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு கடந்த 5 ஆம் தேதி 2 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்குச் (புதுச்சேரி) சென்றேன்.
வீட்டை நோக்கிச் செல்லும்போதே மீன் வாசம் தன் நேசத்தை வெளிப்படுத்தியது. திரும்பிப்பார்த்தேன். சாலையோரத்தில் கானாங்கத்தை மீன் கண்ணைப் பறித்தது. கூடுதலாக மீன் போடச்சொல்லி, அந்தம்மா கேட்ட 200 ரூபாயை கொடுத்தேன்.
மீன் விற்பவரும், சுத்தம் செய்துகொடுப்பவரும் மீன் குழம்பை சோற்றில் ஊற்றி பிசைந்து பசியாறிக்கொண்டிருந்தார்கள். “அக்கா, பசியா இருக்கு. ஒரு வாய் சோறு குடு” என்றேன். அடுத்த நொடி, “ஏன் ராசா நெசமாத்தான் கேக்குறியா” என்றார். “அட குடுக்கா” என்றேன்… அத்தனை ஆனந்தமாக இருவரும் ஆளுக்கொரு உருண்டை கொடுத்தார்கள். போதும் என்று சொல்லியும் விடாமல், வறுத்த மீனை புதைத்து வைத்து மீண்டும் ஒரு உருண்டை… அவர்கள் சாப்பிட வேண்டும் என்று விட்டேனே தவிர, என் மனது போதும் என்று சொல்லவில்லை. ஒட்டுமொத்த அன்பையும் உருண்டையானு உருட்டி கொடுத்தார்கள். ஆகையால் மீன் குழம்பின் சுவை மேலும் கூடியது.
“இப்படி எங்க கிட்ட யாரும் கேட்டதில்ல பா… அதான்… ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி… நீ நல்லாருப்ப…” என்று வாயார வாழ்த்தினார்கள். வயிறார சாப்பிட்ட நான் நெகிழ்ந்தேன் சரி… அவர்கள் ஏன்…
யாரென்றே தெரியாது… வியாபார ரீதியில் முதல்நாள் பழக்கம். ஆனால் அங்கே பெருக்கெடுத்த அன்பு என்னை உருக்கியெடுத்தது.
அவர்கள் கொடுத்த உணவு செறித்துவிட்டது… ஆனால் அவர்களின் பாசமும், உள்ளங்கையில் அந்த மீன் குழம்பின் வாசமும் இப்போதும் கமழ்ந்துகொண்டே இருக்கிறது.
மனிதம்தான் எத்தனை மகத்தானது…
--
கம்ப சூத்திரம்
பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளி வைத்த சத்தான கம்பனுக்கு ஈடு
இன்னும் வித்தாகவில்லை என்று பாடு
சீதை நடையழகும் ராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி எனைப்போட்டான் மதுக்குடத்தில் அள்ளி
அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி
எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி
தென்னிலங்கைச் சீமையிலே சீதை அனுமனிடம் சொன்னதொரு வாசகத்தைப் பார்த்து நான் துள்ளிவிட்டேன் மேனியெல்லாம் வேர்த்து
காலமெனும் ஆழியிலும் காற்றுமழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு இது தலைமுறைக்கு எழுதிவைச்ச சீட்டு
கம்பனெனும் மாநதியில் கால் நதிபோல் ஆவதென நம்புகிறேன் பாட்டெழுதும் நானே அந்த நாயகன்தான் என்ன நினைப்பானோ