கரகாட்டக்காரர்கள்

தமிழகத்தின் மிகப் பழமையான கலை கரகாட்டம். கரகம் சுமக்கும் கலைஞர்களால்தான் இன்றைக்கும் இக்கலை உயிர்ப்போட இருக்கு. காலம் காலமாய் இந்தக் கலையை தாங்கிப் பிடித்திருக்கும் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கயை பக்கத்தில் இருந்து பார்த்து அவர்களோடு பேசிய என் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

கரகாட்டம், சங்க இலக்கியங்களில் “குடக்கூத்து” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெகு இயல்பாகப் பேசிப் பழகும் கரகாட்டக் கலைஞர்கள், “நாங்கள் இல்லையென்றால் திருவிழாக்கள் களைகட்டாது” என்று பெருமையோடு சொன்னார்கள். கரகம் என்றால் என்ன என்று ஆரம்பித்து அந்தத் தொழிலை நேசிக்கும் விதத்தையும், கரகத்தினுள் என்னவெல்லாம் வைப்போம் என்பதையும் விளக்கிச் சொன்னார்கள்.

மாசி முதல் ஆடிவரை மட்டுமே இவர்களுக்கான அறுவடைக்காலம். இந்தக் குறிப்பிட்ட நாள்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் அடுத்தடுத்த மாதத்திற்கான அத்தனைச் செலவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலையில்லா நாள்களில் வேண்டும் பணம் என்றால், கூரை திறந்து கொட்டுமா என்ன. பருவமழைக்கு காத்திருக்கும் விவசாயிபோல புன்னகையோடு பூத்திருக்கிறார்கள் திருவிழா நாள்களுக்காக…

எல்லோரையும் போல ஆசாபாசங்கள் இவர்களுக்கும் உண்டு என்பதை மறுக்க முடியுமா… எல்லோர் வேலையிலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் என்று யதார்த்தமாகச் சொல்லிவிட்டு கடந்துவிட மாட்டார்கள் இந்தக் கலைஞர்களின் நிலையை அறிந்தவர்கள். ஆம் கர்ப்பம் தரித்திருந்தாலும் அதைக் கலைத்துவிட்டு காலில் சலங்கைக் கட்டும் இவர்களின் அழுகுரல் சலங்கை ஒலியில் சலனமில்லாமல் சரிந்துவிடுகிறது. ஊர்ஊராகச் சென்று நிகழ்ச்சிகள் நடத்தும் இவர்கள், தங்களது வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். உலை கொதிக்க, கரகக்கலையை கையிலெடுத்த இவர்களின் நிலையையை என் மனதில் பதித்துச் சென்றார்கள்.

படித்துவிட்டு இந்தத் தொழிலைக் கையிலெடுப்பவர்கள் மட்டுமல்ல, இந்தக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வருமானமும் சொற்பமே.

பாட்டி சொன்ன கதைகளை கேட்டு வளர்ந்த குழந்தைகளைப் பார்த்திருப்போம், ஆனால் இவர்களுக்கு கலையை ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் இக் கலைஞர்களின் மூதாதையர்கள். பரம்பரைத் தொழிலை, பாரம்பரியமிக்க இந்தக் கலையைக் காக்க பம்பரமாய் சுற்றுகிறார்கள் கரகக்கலைஞர்கள்.

ஓடி ஓடி உழைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் ஆடி ஆடி பிழைப்பவர்கள் கரகாட்டக் கலைஞர்கள். அங்கம் நோகும், ஆனாலும் அருகில் இருப்பவர்களின் ஆராவாரத்தில் வலி கரைந்துபோகும் என்று சொன்னார்கள். “சமயத்தில் கால் உடைந்தும் போவதுண்டு” என்று சொன்னவர்கள், உறுப்புகள் சேதமானால் உணவுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை முன் வைத்தார்கள். என்னிடம் பதில் இல்லை. “30ஐக் கடந்தாலே முதிர்ந்துவிட்டதாய் சொல்கிறார்கள். அகவைக் கடந்துவிட்டதென்று ஆட்டக்காரரை மாற்றச் சொல்கிறார்கள். குழுவில் இளம்பெண்கள்தான் இடம்பெற வேண்டும் என்கிறார்கள், ஆடைகளை இப்படித்தான் அணிய வேண்டும் என்கிறார்கள். ம்… இப்படி இன்னும் எத்ததனை எத்தனையோ… கலையாகப் பார்க்காமல் கசடாகப் பார்க்கிறார்கள் கரகாட்டத்தை.” இவையெல்லாம் உடைந்த குரலில் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள்.

அந்தக் காலத்தில் வந்த திரைப்படங்களில் கரகாட்டக் கலைஞர்களின் தரம் குறையாமல் பார்த்துக்கொண்ட திரைத்துறையினர், தற்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டதாகவும் அவர்களும் எங்களைக் காயப்படுத்துகிறார்கள் என்றும் வேதனைப்படுகிறார்கள் இந்தக் கலைஞர்கள். மணிக்கணக்காய் ஒப்பனை செய்து, ஒப்புக்கொண்டபடி உடை உடுத்தி, உறக்கம் தொலைத்து ஒத்திகைப் பார்த்து, ஆடத் தயாராகி ஆவலோடு வந்தால் மழை வந்துவிட்டது மற்றுமொரு நிகழ்ச்சியில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சட்டென்று அங்கிருந்து கலைந்து விடுவார்கள். அந்த நேரத்தில், கொட்டும் மழை நீரில் கரைந்துபோகும் எங்கள் கண்ணீர்துளிகள் என்று அவர்கள் சொன்னபோது என்னால் கலங்காகமலிருக்க முடியவில்லை.

ஒரு நிகழ்ச்சியை நிறைவு செய்ய, நிலம் அதிர ஆடிய பிறகு இவர்களுக்கு கிடைக்கும் தொகையில் துளியாவது நிலம் வாங்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணமில்லை. களி உண்டு இக் கலையை வளர்க்க வேண்டுமென்பதற்காகத்தான் என்பதை என்னால் முழுமையாக உணர முடிந்தது. குறைவான ஆடை உடுத்தியும், குறை இருந்தது ஆட்டத்தில் என்று சொல்லி கூலியை குறைத்துவிடுகிறார்கள் எனக்கூறிய கலைஞர்கள், வருமானம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு வந்த எங்களுக்கு இதுபோன்ற ஏமாற்றங்கள் கொஞ்சமல்ல எனக் கூறியபோது என் நெஞ்சம் கனத்தது.

திருவிழா நாள்களில் கிடைக்கும் வாய்ப்புகளுக்காக ஏங்கி, ஒப்பந்தம் செய்பவர்களின் வார்த்தைகளையெல்லாம் தாங்கி, ஆடிப் பாடிக் களைத்து, பேசியதொகை அப்படியே கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் இடையிலே வந்து நிற்பார்களாம் இடைத்தரகர்கள். உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் அசைத்து உழைத்தப் பணத்தில் பங்கு என்றால் எப்படியிருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.

அங்கம் தெரியும்படி உடை உடுத்தினாலும் எங்கள் மானத்திற்கு பங்கம் வரக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாகவே இருப்போம். ஆனால் அனைத்து குணங்களும் நிறைந்த இந்த மனித இனத்தில் புனிதர்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது என்றார்கள். பாரம்பரியமிக்க இந்தக் கலையை கையில் எடுத்திருக்கும் எங்களை காலாவதியானவர்களாவே பார்க்கிறது இந்தச் சமூகம். உணர்வும் உயிருமுள்ள ஜீவன்களாக எங்களைப் பாருங்கள். கலைஞர்களாகக்கூட மதிக்க வேண்டாம் கொஞ்சம் கண்ணியமாக நடத்துங்கள் என்று அவர்கள் சொன்னபோது வெட்கித் தலைகுனிந்தேன்…